கடந்த ஜூலை 13ம் தேதி சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் (தேனாம்பேட்டை டிஎமஎஸ் வளாகத்தில் அமைந்துள்ளது) மாவட்ட தொழிலாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு தொழிலாளியின் தாவா குறித்து சில நடவடிக்கை விபரங்களை சேகரிக்க நானும், சில தோழர்களும் சென்றிருந்தோம். சுமார் 12/00 மணி அளவில் திடீரென அந்த அலுவலகத்தில் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது. இணைத் தொழிலாளர் ஆணையர் (சமரசம்) தனது அறையிலிருந்து வெளிவந்து தொழிலாளர் ஆணையர் அறைக்கு ஓடினார். சில நிமிடங்களில் சிறப்பு தொழிலாளர் துணை ஆணையர் தனது அறையிலிருந்து வெளிவந்து ஆணையர் அறைக்குள் ஓடினார். 10 நிமிடம் கழித்து JCL மற்றும் SPL DCL வெளியே வந்து அலுவலக வராண்டாவில் நின்றுகொண்டே அடுத்தநாள் நடைபெறுவதாக உத்தேசித்திருந்த வழக்குகளை ஒத்திப்போடவும், சம்பந்தப்பட்ட நிறுவனம், தொழிற் சங்கங்களுக்கும் போன் மூலம் தகவல் தரவும் தமது உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உத்திரவிட்டனர். உடனே நானும், என்னுடன் வந்திருந்த தோழர்களும் திடீரென அமைச்சர் வருகை அல்லது தலைமைச் செயலக மீட்டிங் என ஏதாவது முடிவாகியிருக்கும் - பாவம் இந்த அலுவலர்கள் என பேசிக்கொண்டு, நாங்கள் யாரிடம் விபரம் சேகரிக்கச் சென்றோமோ அவரும் இந்த பரபரப்பு நிகழ்வுகளில் ஓடிக்கொண்டிருந்ததால் சற்று காத்திருந்தோம். இதன் நடுவில் JCL அலுவலக அட்டெண்டர் ஓடிவந்து SPL DCL மற்றும் JCL ம் அய்யா தலைவர் கீழே லிப்ட் அருகே வந்துட்டாங்கய்யா, நீங்க கமிஷனர் ரூமுக்கு போங்க, தலைவர் மேலே வந்ததும் நான் அய்யா ரூமுக்கு வரச்சொல்றேன் என்று கூறியதும் JCL மற்றும் DCL ஆணையர் அறைக்குச் சென்றனர். எங்களுக்கு சற்று வியப்பு மேலிட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். லிப்ட் மேலேறிவர திமுகவின் தொழிற்சங்க அமைப்பான தொமுச பேரவைப் பொதுச்செயலாளர் திரு மு.சண்முகம் மற்றும் ஒருவர் வெளியே வந்து கமிஷனர் இருக்காரா என்றவுடன், அய்யா இருக்காருங்கய்யா, தலைவர் வந்தவுடன் உள்ளே அனுப்பச் சொன்னாங்கய்யா என பவ்யமாக கூறவும், தலைவர் ஆணையாளர் அறைக்கு சென்றார். ஆணையாளரின் நேர்முக உதவியாளர் அறையில் காபி டிரே ரெடியாகத் துவங்கியது.
சற்று ரிலாக்ஸ் ஆன மற்ற இரண்டு அட்டெண்டர்களில் ஒருவரிடம் என்னண்ணே ஒரே பரபரப்பா இருக்கு என்றோம். அவர் நோக்கியாவில் மீண்டும் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது. அது சம்பந்தமா உடனே நாளை பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு நடக்குது. நாளை என்ன பேச வேண்டுமென ஒத்திகை பார்த்துக் கொள்ளத்தான் தலைவர் வந்துள்ளார் என யதார்த்தத்தை போட்டுடைத்தார் அந்த அட்டெண்டர். அடுத்த அரை மணியில் எங்கள் வேலை முடிந்து வெளியேறிவிட்டோம். நானும் எனது ஊர் திரும்பி மறுநாள் சென்னை தோழர்களிடம் பேப்பர்களில் நோக்கியா வேலை நிறுத்தம் குறித்து செய்திகள் வந்துள்ளதா என கேட்ட போது அவ்வாறு எதுவும் வரவில்லை என்றனர். பெரிய இடத்து சமாச்சாரம் வெளிவராது என எண்ணிக் கொண்டேன். நோக்கியா இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மட்டும் செயல்பட்டு வருவதையும், சிஐடியு சங்கம் அமைக்க முயன்று வருவதையும் அறிந்தோம்.
தொழிற்தாவாச் சட்டம் பொருந்தி வருகிற நிறுவனங்களில் தொழிலாளர்கள் பிரச்சனை, தாவா, வேலைநிறுத்தம் எனில் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் தலையிட்டு தீர்வு செய்ய வேண்டுமென்பது சட்ட நியதிதான். ஆனால் தமிழக அரசு பொதுத்துறைகள் உள்ளிட்ட எந்த நிறுவனங்களில் வேலை நிறுத்தம் போன்ற நிலை வந்தால் மேற்குறிப்பிட்டது போல விரைவாக தொழிலாளர் துறை தலியிட்டிருக்குமா என்றால் சந்தேகமே. ஆனால் பன்னாட்டு முதலாளி ஒருவர் சிரமப்படுகிறார் என்றால் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் பம்பரமாக செயல்பட்டு மற்ற துறை வழக்குகளையெல்லாம் தள்ளிவைத்து தலையிடுகிறது. தொழிற்சங்க தலைவர் மறுநாள் பேச்சு வார்த்தை எப்படி நடக்க வேண்டுமென முந்திய நாளே வந்து தெரிவித்துவிட்டுச் செல்கிறார். இந்த ஓட்டுக்கட்சி தொழிற்சங்கத்தையும் நம்பி தொழிலாளர்கள் பின்செல்வதை பார்க்கிற போது வேதனைதான் மிஞ்சுகிறது.
தொமுச தொழிற்சங்கத்திற்கு என்ன அக்கரை என்பதை பார்க்க வேண்டுமெனில் இணையதளத்தில் நோக்கியா நிறுவனம் நிலம் வாங்க துவங்கியதிலிருந்து துணை முதல்வர் ஸ்டாலின் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டதிலிருந்து துவங்கி சில ஆவணங்களை புரட்டிப்பார்த்தால் பெரிய அளவில் அதிர்ச்சிதான் காத்திருந்தது. 2005ல் நோக்கியா இந்தியா நிறுவனமும் தமிழ்நாடு அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கிறது. அது சில முறை திருத்தப்படுகிறது. அதன்படி
* நோக்கியாவிற்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலம் ஒதுக்கியதில், அந்த நிலத்திற்கு விலை இரண்டு முறை நிர்ணயித்ததில், பத்திரப் பதிவில் சலுகை காட்டியதில் தமிழகம் 7.4 கோடி நட்டம் அடைந்திருக்கிறது.
* அந்நிறுவனத்திற்கு வாட் வரி தள்ளுபடி செய்ததன் மூலம் 645.4 கோடி பயன் பெறுகிறது அந்த நிறுவனம். தமிழக அரசிற்கு நட்டம் 645.4 கோடி
* இந்திய அரசாங்கம் ஏற்றுமதி வரி விலக்கின் மூலம் 684.4 கோடி தள்ளுபடி அளிக்கிறது
* தொழிற்சங்கங்கள் அமைக்கக் கூடாது
* தொழிலாளர்களுக்கு சம்பளம் ரூ 3400 லிருந்து 5400 வரை என நிர்ணயிக்கப் படுகிறது
* பல பணிகள் கான்ட்ராக்ட் முறையிலும், தற்காலிக முறையிலுமே இருக்கும். நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்
* நோக்கியா தனது பிற நாட்டில் அமைந்துள்ள இதே வகையான பணி பார்க்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆண்டிற்கு 44624 யூரோ அதாவது 29 லட்சம். இது தமிழ்நாட்டில் வழங்கப்படுவதைப் போல 45 மடங்கு அதிகம் (அதாவது தமிழ்நாட்டு பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டி ஓகோவென நடைபெறும் பன்னாட்டு வியாபாரம்.
* முதலில் 1200 தொழிலாளர்களுடன் தொழிற்சாலை துவங்கி பின்னர் உற்பத்தி அதிகரித்ததால் 8000 பேருக்கு வேலையளித்ததாக தெரிவிக்கப் பட்டது. ஆனால் துணை தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் ஜூன் 2008ல் ஆய்வு மேற்கொண்டு அளித்த அறிக்கையினை பார்க்கிற போது 4548 பணியாளர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். பின்னர 2893 நபர்கள் கான்ட்ராக்ட் அடிப்படையில் சில பணிகள் பார்த்து வந்துள்ளதாகவும் அவரது அறிக்கையிலிருந்து தெரியவருகிறது.
2007-08ம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் கம்ட்ரோலர் ஆடிட் ஜெனரல் எனப்படும் இந்திய அரசாங்க தணிக்கைத்துறை மேற்குறித்த கோடிக்கணக்கிலான அரசாங்க வருவாய் இழப்பை சுட்டிக்காண்பித்துள்ளது. இவையனைத்து விபரங்களும் சிட்டிசன் ரிசர்ச் கலெக்டிவ் என்று சென்னையிலுள்ள ஒரு அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக சிரமப்பட்டு சேகரித்த தகவல்களிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது (இவை எக்கனாமிக் பொலிடிக் வீக்லி என்ற பத்திரிக்கையின் அக்டோபர் 3ம் தேதியிட்ட பிரசுரத்தில் காணப்படுகிறது www.epw.in என்ற அதன் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்)
கடந்த ஜனவரி 2010ல் தொழிலாளிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக நிர்வாகத்திடம் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக 60 பேர் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்படுகின்றனர். அதன்பின் சமரச பேச்சு வார்த்தைக்குப் பின் தற்காலிக வேலைநீக்கத்திலிருப்பவர்கள் தவிர மற்றவர்கள் வேலைக்குத் திரும்புகிறார்கள் (தற்காலிக வேலைநீக்கத்தை விலக்கிக்கொள்ளாமல் முரண்டு பிடித்த நிர்வாகத்திடம் விரைவி்ல் சம்பள ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை நடத்தப்படும் என ஒரு உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டு வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்துள்ளது. பின்னர் ஜூலை 13ல் மீண்டும் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. அது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சில சம்பள உயர்வுகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு நல்லெண்ண அடிப்படையில் ஏற்கனவே தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடரும் என்ற நிபந்தனையுடன் தற்காலிக வேலை நீக்கம் 6 மாதம் கழித்து விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. 6 மாதம் 60 பேர் சம்பளமில்லாமல் தெருவில் நின்றிருந்திருக்கிறார்கள். அதன்பின்னர் விஷவாயு கசிவு அவர்களுக்கு பாதுகாப்பின்மை போன்றவற்றிற்காக தற்போதைய வேலைநிறுத்தம் தொடங்கியிருக்கிறது. பொதுவாக பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தம் என்கிற நிலை வரும் போது கடந்த தற்காலிக வேலைநீக்கம் போன்றவற்றை முற்றிலுமாக ரத்து செய்வதுதான் சமரசத்திற்கு அடையாளமாக இருந்திருக்க முடியும். ஆனால் மாநில முதல்வர் குடும்பத்தின் பரிபூரண ஆசீர்வாதத்துடன், இளையதளபதி துணை முதல்வருடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ள நிறுவனத்திடம் திமுக தொழிற்சங்கம் பேசச் சென்றால் தொழிலாளி பாடு சிங்கியடிப்பதுதான் எதார்த்தம். எனவே அந்த தொழிலாளர்களுக்கு நடப்பு அரசியலை புரியவைத்து ஒன்றுபடச்செய்வதே பன்னாட்டு தர்பாரை அடக்க உதவிகரமாக இருக்கும்.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteReally Nice Information It's Very Helpful Thanks for sharing such an informative post.
https://www.vyaparinfo.com/looking-for-bulk-buyers-in-india/
https://www.vyaparinfo.com/looking-for-distributors/