Saturday, August 21, 2010

“வேதாந்தா” முறைகேடு ?!? கொள்ளை போகும் இந்திய வளங்கள் ?


பச்சை வேட்டை, காடுகள் வேட்டை, மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் ஒரிஸ்ஸா, சதீஸ்கர், ராஜஸ்தான், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு பல்லாண்டுகளாக வசித்து வரும் பழங்குடியினரை துரத்தி பாக்சைட், இரும்பு, அலுமினியம் போன்ற கனிம வளங்களை மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சுரங்கத் தொழில் நடத்திக்கொள்ள இந்திய அரசு சட்ட விரோதமாக அனுமதித்து வருகிறது என தொடர்ந்து வினவு தளத்திலும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களிலும் எழுதப்பட்டு வருவது இந்த தளத்தின் வாசகர்களுக்கு நன்கு தெரியும். இந்த மாநிலங்களிலெல்லாம் வேதாந்தாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை திரட்டி தன்னெழுச்சி போராட்டங்கள் நடத்தியது.

நியு இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள் வேதாந்தாவிற்கும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் உள்ள உறவுகளையும், மாவோயிஸ்ட் அழிப்பு என்ற பெயரில் மனித வேட்டை நடைபெற்றுவருவதையும் சுட்டிக் காண்பித்திருந்தன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய திட்டக் குழுவின் உறுப்பினர் திரு என்.சி.சாக்சேனா என்பவர் தலைமையில் 4 நபர்கள் கொண்ட குழு ஒன்றினை மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தினால் நியமிக்கப்பட்டு வேதாந்தாவின் சுரங்க திட்டங்களின் மீதான விசாரணை மேற்கொள்ள பணிக்கப்பட்டது.

17-08-2010 காலை ஆங்கில செய்தித்தாள்களில் “வேதாந்தா சுரங்க திட்டத்தில் பொpய அளவில் முறைகேடு” திரு சாக்சேனா தலைமையிலான குழு அறிக்கை மூலம் தெரிய வந்தது என செய்தி. ஆனால் இந்த செய்தி எந்த தமிழ் செய்தியிலும் வெளிவரவில்லை. மாறாக முப்பதாயிரம் கோடி ஊழல் என சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் காமன் வெல்த் விளையாட்டு ஊழலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பது போல் ஒரு புறம் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி சிரித்துக் கொண்டு மறுபுறம் இந்த விளையாட்டிற்கான கொள்கை பாடலை இசைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு என்ற அவர் பக்கத்தில் நின்று சிரித்துக் கொண்டு புகைப்படத்துடன் செய்தி, இங்கொன்றும் அங்கொன்றுமாக சில விபத்துச் செய்திகள், மனித உறவு முறைகேடுகளைச் சொல்லும் செய்திகள், வழக்கம் போல் உயர்நீதிமன்றம் 40 வருடமாக போராடிக் கொண்டிருந்த ஒரு பென்சன் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த தீர்வு, இலவச தொலைக்காட்சி பெட்டிகள் தமிழக அரசு வழங்கியதில் தவறொன்றுமில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு, தஞ்சை ராஜராஜன் விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு மற்றும் இன்னபிற சினிமா செய்திகளோடு அப்பாவி தமிழர்களின் வாழ்வு துவங்கியது.

வேதாந்தா சுற்றுப்புற சூழல் விதிகள், காடுகள் சட்டம் ஆகியவற்றை முற்றிலுமாக தனது சுரங்க திட்டத்தில் பின்பற்றவில்லை என்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக இரண்டு வகை பழங்குடியினரின் வாழ்வினை பாழடித்தது இந்த தேசத்தின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைத்தெறிவதாக அமைகிறது என நிபுணர் சாக்சேனா அறிக்கை கூறுகிறது. இது குறித்து செய்தியாளர்கள் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை கேட்ட போது 10 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் மேற்படி நிபுணர் குழு அறிக்கை எனக்கு வந்தது. இந்த நாட்டில் துரதிருஷ்டவசமாக ஒரு முறை உள்ளது. அதாவது ஏதேனும் ஒரு பெரிய தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அதிலிருந்து தப்புவதற்கு ஒரு ஜன்னல் “அபராதம் செலுத்து - செல்” என்கிற வகையில் திறந்திருக்கிறது என்றார். மேலும் தவறு நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார். இதோடு இந்த நாடகத்தின் காட்சிகள் முடிவுற்றுவிடும். மக்களும் நாளை காலை இதை மறந்திருப்பார்கள். இந்த நிபுணர் குழு விசாரணை, அவர்கள் சில தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பதெல்லாமே வேதாந்தா நிறுவனத்தின் மீது பெரிய அளவில் மக்கள் எழுச்சி வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக அரசே திட்டமிட்டு நடத்தும் நாடகமே.

இப்படி ஒரு புறம் செய்தியிருக்க அதே செய்தித்தாளில் கைரன் இந்திய என்கிற பெரிய பன்னாட்டு எண்ணை வள நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை 960 கோடி லாடருக்கு வாங்குவதாக வேதாந்தா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்றொரு செய்தி. அதைப்பற்றி எழுதிய டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் மறைமுகமாக இப்படி நாட்டின் எண்ணை வளத்தின் பெரும் பகுதியை ஒரு பன்னாட்டு நிறுவனம் வாங்க அனுமதிப்பது என்பது இந்த நாட்டின் பாதுகாப்பிற்கே குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும் என்கிறது. ஏற்கனவே சைனாவினால் எல்லை பாதுகாப்பிற்கு அச்சம் விளைவிக்கும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் போது இது போன்று பன்னாட்டு நிறுவனத்திற்கு நாட்டின் எண்ணை வளத்தின் பெரும்பகுதியை பின்புறமாக நுழைந்து கைப்பற்ற அனுமதிப்பதென்பது நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என மத்திய அரசுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. ஆனால் இதைப்பற்றியோ அல்லது, சாக்சேனா குழு கூறியுள்ள குற்றச்சாட்டுக்களைப்பற்றியோ சிறிதளவும் கவலைப்படாமல் வேதாந்தா நிறுவனம் தனது பத்திரிகை செய்திக் குறிப்பில் நாங்களும் மற்றொரு பன்னாட்டு அமைப்பான சீசா கோவா என்ற நிறுவனமும் சேர்ந்து 665 கோடி டாலர் மதிப்பிற்கு கைரன் இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டினை கைப்பற்றும் அளவிற்கு பங்குகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என தைரியமாக அறிக்கை விடுகிறது. இந்த வரத்தக பரிமாற்றமெல்லாம் இந்திய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட வேண்டும். இருக்கவே இருக்கிறார்கள் உலக வங்கி நாயகர்கள் மன்மோகன் சிங், மான்டேக் சிங் அலுவாலியா, உள்துறை சிதம்பரம் போன்றவர்கள் என்கிற நம்பிக்கையில் இத்தகைய திமிரான அறிக்கையை வேதாந்தா வெளியிட்டிருக்கிறது.

சரி இந்த கைரன் இந்தியா என்ற நிறுவனம் யார் என பார்ப்போமானால்- அதுவும் இந்த நாட்டின் எண்ணை வளங்களை சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கிற பன்னாட்டு நிறுவனமே. இதன் தலைவர் சர் பில் கேம்மல் என்கிற அயல்நாட்டவர் என்பதோடு இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தில் (போர்டு டைரக்டர்கள்) உள்ள பெரும்பான்மையினரும் அந்நிய நாட்டவரே.


இந்த நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்குமுள்ள உள்ள மகிழ்ச்சியான உறவுகளை மேற்கண்ட புகைப்படங்கள் பறைசாற்றும். ஓஎன்ஜிசி என்று சொல்லப்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் இந்திய கடற்பகுதிகளில் 30 சதவீத எண்ணை பேசின்களையும் இந்த கைரன் இந்தியா என்கிற பன்னாட்டு நிறுவனம் 70 சதவீத எண்ணை பேசின்களையும் கைவசம் கொண்டிருக்கிறது என்றால் இதன் செல்வாக்கை புரிந்திருப்பீர்கள். ராஜஸ்தான் கடற்பகுதியில் இந்த கைரன் இந்தியா 150 எண்ணை கிணறுகளையும், 3111 சதுர கிலோமீட்டர் அளவிலான எண்ணை பேசினையும் தன்னகத்தே கொண்டது.

அதே போல் மன்னார் வளைகுடா கடலில் சுமார் 1450 சதுர கி.மீ, பரப்பளவிலான எண்ணை பேசினை தன்வசம் கொள்ள ராஜபக்ஷேயுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.




காடுகளை அழித்து இந்தியாவின் பாக்சைட், இரும்பு தாது, அலுமினியம் போன்ற கனிம வளங்களை கொள்ளை கொண்டுபோகிறது வேதாந்தா நிறுவனம் என்கிற விமர்சனங்கள் பலமாக எழுந்து அதில் தற்போது தற்காலிகமாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால், நாட்டின் கனிமவள சுரண்டலை தற்காலிகமாக நிறுத்திவைத்து எண்ணை வளங்களை சுரண்ட முனைந்துள்ளது வேதாந்தா. இது குறித்து இரண்டு நிறுவனங்களும் அனுமதி கேட்டு வரட்டும் நாங்கள் கவனமாக இருப்போம் என இன்று இந்தியாவின் ஓட்டுப்பொறுக்கி அமைச்சர்களும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் அறிக்கைகளை நம்ப முடியாது. இப்படி ஒரு அறிக்கை என்றால் எங்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்ட அறிக்கையாகவே கருத வேண்டும்.


இத்தகைய நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சம் விளைவிக்கிற, நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கிற வேதாந்தா, கைரன் இந்தியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து மக்கள் ஒன்றிணைந்து போராடி நாட்டை மீட்க வேண்டிய தருணமிது.

இன்று வினவு தளத்தில் எனது இந்த இடுகை வெளியிடப்பட்டுள்ளது - நன்றி வினவு தோழர்களுக்கு - சித்திரகுப்தன்-

தலைவரும், முதலாளியும் "நோக்கியா" தொழிலாளி பாடு "சிங்கியா?"


புதிய பொருளாதார கொள்கையின் விளைவால் சென்னைக்கு அருகே "சிறப்பு பொருளாதார மண்டலம்" பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நோக்கியா நிறுவனம் அதன் தொழிலாளர்களின் மீது அடக்கு முறையை ஏவுவதும், அதை எதிர்த்து அவ்வப்போது போராட்டப் பாதையை தேர்வு செய்கிற தொழிலாளர்களை சரியாக வழிநடத்த புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி போன்று உண்மையான இடது சாரி அமைப்பு தேவை என்பதை வலியுறுத்தி இங்கே வினவு தளத்தில் சில இடுகைகள் வந்திருந்தது. அதற்கு பின்னூட்டம் எழுதலாமா என எண்ணும் போது, தனி இடுகையே எழுதுமளவிற்கு விபரங்கள் சேர்ந்ததால் இந்த பதிவை தோழர்களிடம் பதிவு செய்து கொள்ள எண்ணினேன். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்திய வளங்கள் தாரை வார்க்கப்படுவது பற்றியும், தொழிலாளி வர்க்கம் சுரண்டப்படுவது பற்றியும் பல கட்டுரைகள் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களிலும், சில தனி பிரசுரங்களாகவும் வந்திருக்கிறது. ஆனாலும் அவ்வப்போது நிகழ்கிற அபாயங்களை, அரசின் "புரிந்துணர்வு" ஒப்பந்தங்களால் சுரண்டப்படுகிற இந்நாட்டு வளங்கள், பொதுமக்கள் வரிப்பணத்தில் அந்நிய முதலாளிகளின் வளர்ச்சி ஆகியவை தெரியவரும்போதெல்லாம் அம்பலப்படுத்தும் வேலையைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.


கடந்த ஜூலை 13ம் தேதி சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் (தேனாம்பேட்டை டிஎமஎஸ் வளாகத்தில் அமைந்துள்ளது) மாவட்ட தொழிலாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு தொழிலாளியின் தாவா குறித்து சில நடவடிக்கை விபரங்களை சேகரிக்க நானும், சில தோழர்களும் சென்றிருந்தோம். சுமார் 12/00 மணி அளவில் திடீரென அந்த அலுவலகத்தில் ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது. இணைத் தொழிலாளர் ஆணையர் (சமரசம்) தனது அறையிலிருந்து வெளிவந்து தொழிலாளர் ஆணையர் அறைக்கு ஓடினார். சில நிமிடங்களில் சிறப்பு தொழிலாளர் துணை ஆணையர் தனது அறையிலிருந்து வெளிவந்து ஆணையர் அறைக்குள் ஓடினார். 10 நிமிடம் கழித்து JCL மற்றும் SPL DCL வெளியே வந்து அலுவலக வராண்டாவில் நின்றுகொண்டே அடுத்தநாள் நடைபெறுவதாக உத்தேசித்திருந்த வழக்குகளை ஒத்திப்போடவும், சம்பந்தப்பட்ட நிறுவனம், தொழிற் சங்கங்களுக்கும் போன் மூலம் தகவல் தரவும் தமது உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உத்திரவிட்டனர். உடனே நானும், என்னுடன் வந்திருந்த தோழர்களும் திடீரென அமைச்சர் வருகை அல்லது தலைமைச் செயலக மீட்டிங் என ஏதாவது முடிவாகியிருக்கும் - பாவம் இந்த அலுவலர்கள் என பேசிக்கொண்டு, நாங்கள் யாரிடம் விபரம் சேகரிக்கச் சென்றோமோ அவரும் இந்த பரபரப்பு நிகழ்வுகளில் ஓடிக்கொண்டிருந்ததால் சற்று காத்திருந்தோம். இதன் நடுவில் JCL அலுவலக அட்டெண்டர் ஓடிவந்து SPL DCL மற்றும் JCL ம் அய்யா தலைவர் கீழே லிப்ட் அருகே வந்துட்டாங்கய்யா, நீங்க கமிஷ‌னர் ரூமுக்கு போங்க, தலைவர் மேலே வந்ததும் நான் அய்யா ரூமுக்கு வரச்சொல்றேன் என்று கூறியதும் JCL மற்றும் DCL ஆணையர் அறைக்குச் சென்றனர். எங்களுக்கு சற்று வியப்பு மேலிட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். லிப்ட் மேலேறிவர திமுகவின் தொழிற்சங்க அமைப்பான தொமுச பேரவைப் பொதுச்செயலாளர் திரு மு.சண்முகம் மற்றும் ஒருவர் வெளியே வந்து கமிஷ‌னர் இருக்காரா என்றவுடன், அய்யா இருக்காருங்கய்யா, தலைவர் வந்தவுடன் உள்ளே அனுப்பச் சொன்னாங்கய்யா என பவ்யமாக கூறவும், தலைவர் ஆணையாளர் அறைக்கு சென்றார். ஆணையாளரின் நேர்முக உதவியாளர் அறையில் காபி டிரே ரெடியாகத் துவங்கியது.

சற்று ரிலாக்ஸ் ஆன மற்ற இரண்டு அட்டெண்டர்களில் ஒருவரிடம் என்னண்ணே ஒரே பரபரப்பா இருக்கு என்றோம். அவர் நோக்கியாவில் மீண்டும் வேலை நிறுத்தம் துவங்கியுள்ளது. அது சம்பந்தமா உடனே நாளை பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு நடக்குது. நாளை என்ன பேச வேண்டுமென ஒத்திகை பார்த்துக் கொள்ளத்தான் தலைவர் வந்துள்ளார் என யதார்த்தத்தை போட்டுடைத்தார் அந்த அட்டெண்டர். அடுத்த அரை மணியில் எங்கள் வேலை முடிந்து வெளியேறிவிட்டோம். நானும் எனது ஊர் திரும்பி மறுநாள் சென்னை தோழர்களிடம் பேப்பர்களில் நோக்கியா வேலை நிறுத்தம் குறித்து செய்திகள் வந்துள்ளதா என கேட்ட போது அவ்வாறு எதுவும் வரவில்லை என்றனர். பெரிய இடத்து சமாச்சாரம் வெளிவராது என எண்ணிக் கொண்டேன். நோக்கியா இந்தியா பிரைவேட் லிமிடெட்டில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மட்டும் செயல்பட்டு வருவதையும், சிஐடியு சங்கம் அமைக்க முயன்று வருவதையும் அறிந்தோம்.


தொழிற்தாவாச் சட்டம் பொருந்தி வருகிற நிறுவனங்களில் தொழிலாளர்கள் பிரச்சனை, தாவா, வேலைநிறுத்தம் எனில் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் தலையிட்டு தீர்வு செய்ய வேண்டுமென்பது சட்ட நியதிதான். ஆனால் தமிழக அரசு பொதுத்துறைகள் உள்ளிட்ட எந்த நிறுவனங்களில் வேலை நிறுத்தம் போன்ற நிலை வந்தால் மேற்குறிப்பிட்டது போல விரைவாக தொழிலாளர் துறை தலியிட்டிருக்குமா என்றால் சந்தேகமே. ஆனால் பன்னாட்டு முதலாளி ஒருவர் சிரமப்படுகிறார் என்றால் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் பம்பரமாக செயல்பட்டு மற்ற துறை வழக்குகளையெல்லாம் தள்ளிவைத்து தலையிடுகிறது. தொழிற்சங்க தலைவர் மறுநாள் பேச்சு வார்த்தை எப்படி நடக்க வேண்டுமென முந்திய நாளே வந்து தெரிவித்துவிட்டுச் செல்கிறார். இந்த ஓட்டுக்கட்சி தொழிற்சங்கத்தையும் நம்பி தொழிலாளர்கள் பின்செல்வதை பார்க்கிற போது வேதனைதான் மிஞ்சுகிறது.

தொமுச தொழிற்சங்கத்திற்கு என்ன அக்கரை என்பதை பார்க்க வேண்டுமெனில் இணையதளத்தில் நோக்கியா நிறுவனம் நிலம் வாங்க துவங்கியதிலிருந்து துணை முதல்வர் ஸ்டாலின் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டதிலிருந்து துவங்கி சில ஆவணங்களை புரட்டிப்பார்த்தால் பெரிய அளவில் அதிர்ச்சிதான் காத்திருந்தது. 2005ல் நோக்கியா இந்தியா நிறுவனமும் தமிழ்நாடு அரசும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்கிறது. அது சில முறை திருத்தப்படுகிறது. அதன்படி

* நோக்கியாவிற்கு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் நிலம் ஒதுக்கியதில், அந்த நிலத்திற்கு விலை இரண்டு முறை நிர்ணயித்ததில், பத்திரப் பதிவில் சலுகை காட்டியதில் தமிழகம் 7.4 கோடி நட்டம் அடைந்திருக்கிறது.

* அந்நிறுவனத்திற்கு வாட் வரி தள்ளுபடி செய்ததன் மூலம் 645.4 கோடி பயன் பெறுகிறது அந்த நிறுவனம். தமிழக அரசிற்கு நட்டம் 645.4 கோடி

* இந்திய அரசாங்கம் ஏற்றுமதி வரி விலக்கின் மூலம் 684.4 கோடி தள்ளுபடி அளிக்கிறது

* தொழிற்சங்கங்கள் அமைக்கக் கூடாது

* தொழிலாளர்களுக்கு சம்பளம் ரூ 3400 லிருந்து 5400 வரை என நிர்ணயிக்கப் படுகிறது

* பல பணிகள் கான்ட்ராக்ட் முறையிலும், தற்காலிக முறையிலுமே இருக்கும். நிரந்தரப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்

* நோக்கியா தனது பிற நாட்டில் அமைந்துள்ள இதே வகையான பணி பார்க்கும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஆண்டிற்கு 44624 யூரோ அதாவது 29 லட்சம். இது தமிழ்நாட்டில் வழங்கப்படுவதைப் போல 45 மடங்கு அதிகம் (அதாவது தமிழ்நாட்டு பணியாளர்களின் உழைப்பைச் சுரண்டி ஓகோவென நடைபெறும் பன்னாட்டு வியாபாரம்.

* முதலில் 1200 தொழிலாளர்களுடன் தொழிற்சாலை துவங்கி பின்னர் உற்பத்தி அதிகரித்ததால் 8000 பேருக்கு வேலையளித்ததாக தெரிவிக்கப் பட்டது. ஆனால் துணை தலைமை தொழிற்சாலை ஆய்வாளர் ஜூன் 2008ல் ஆய்வு மேற்கொண்டு அளித்த அறிக்கையினை பார்க்கிற போது 4548 பணியாளர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். பின்னர 2893 நபர்கள் கான்ட்ராக்ட் அடிப்படையில் சில பணிகள் பார்த்து வந்துள்ளதாகவும் அவரது அறிக்கையிலிருந்து தெரியவருகிறது.

2007-08ம் ஆண்டு தணிக்கை அறிக்கையில் கம்ட்ரோலர் ஆடிட் ஜெனரல் எனப்படும் இந்திய அரசாங்க தணிக்கைத்துறை மேற்குறித்த கோடிக்கணக்கிலான அரசாங்க வருவாய் இழப்பை சுட்டிக்காண்பித்துள்ளது. இவையனைத்து விபரங்களும் சிட்டிசன் ரிசர்ச் கலெக்டிவ் என்று சென்னையிலுள்ள ஒரு அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளாக சிரமப்பட்டு சேகரித்த தகவல்களிலிருந்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது (இவை எக்கனாமிக் பொலிடிக் வீக்லி என்ற பத்திரிக்கையின் அக்டோபர் 3ம் தேதியிட்ட பிரசுரத்தில் காணப்படுகிறது www.epw.in என்ற அதன் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்)


 
கடந்த ஜனவரி 2010ல் தொழிலாளிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக நிர்வாகத்திடம் எதிர்த்து குரல் கொடுத்ததற்காக 60 பேர் தற்காலிக வேலைநீக்கம் செய்யப்படுகின்றனர். அதன்பின் சமரச பேச்சு வார்த்தைக்குப் பின் தற்காலிக வேலைநீக்கத்திலிருப்பவர்கள் தவிர மற்றவர்கள் வேலைக்குத் திரும்புகிறார்கள் (தற்காலிக வேலைநீக்கத்தை விலக்கிக்கொள்ளாமல் முரண்டு பிடித்த நிர்வாகத்திடம் விரைவி்ல் சம்பள ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை நடத்தப்படும் என ஒரு உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டு வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்துள்ளது. பின்னர் ஜூலை 13ல் மீண்டும் வேலை நிறுத்தம் தொடங்குகிறது. அது தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சில சம்பள உயர்வுகளுடன் ஒப்பந்தம் ஏற்பட்டு நல்லெண்ண அடிப்படையில் ஏற்கனவே தற்காலிக வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களின் மீதான ஒழுங்கு நடவடிக்கை தொடரும் என்ற நிபந்தனையுடன் தற்காலிக வேலை நீக்கம் 6 மாதம் கழித்து விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. 6 மாதம் 60 பேர் சம்பளமில்லாமல் தெருவில் நின்றிருந்திருக்கிறார்கள். அதன்பின்னர் விஷ‌வாயு கசிவு அவர்களுக்கு பாதுகாப்பின்மை போன்றவற்றிற்காக தற்போதைய வேலைநிறுத்தம் தொடங்கியிருக்கிறது. பொதுவாக பேச்சுவார்த்தை நடைபெற்று ஒப்பந்தம் என்கிற நிலை வரும் போது கடந்த தற்காலிக வேலைநீக்கம் போன்றவற்றை முற்றிலுமாக ரத்து செய்வதுதான் சமரசத்திற்கு அடையாளமாக இருந்திருக்க முடியும். ஆனால் மாநில முதல்வர் குடும்பத்தின் பரிபூரண ஆசீர்வாதத்துடன், இளையதளபதி துணை முதல்வருடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ள நிறுவனத்திடம் திமுக தொழிற்சங்கம் பேசச் சென்றால் தொழிலாளி பாடு சிங்கியடிப்பதுதான் எதார்த்தம். எனவே அந்த தொழிலாளர்களுக்கு நடப்பு அரசியலை புரியவைத்து ஒன்றுபடச்செய்வதே பன்னாட்டு தர்பாரை அடக்க உதவிகரமாக இருக்கும்.