Saturday, August 21, 2010

“வேதாந்தா” முறைகேடு ?!? கொள்ளை போகும் இந்திய வளங்கள் ?


பச்சை வேட்டை, காடுகள் வேட்டை, மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் ஒரிஸ்ஸா, சதீஸ்கர், ராஜஸ்தான், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு அங்கு பல்லாண்டுகளாக வசித்து வரும் பழங்குடியினரை துரத்தி பாக்சைட், இரும்பு, அலுமினியம் போன்ற கனிம வளங்களை மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்ஸ் என்ற நிறுவனத்திற்கு சுரங்கத் தொழில் நடத்திக்கொள்ள இந்திய அரசு சட்ட விரோதமாக அனுமதித்து வருகிறது என தொடர்ந்து வினவு தளத்திலும், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களிலும் எழுதப்பட்டு வருவது இந்த தளத்தின் வாசகர்களுக்கு நன்கு தெரியும். இந்த மாநிலங்களிலெல்லாம் வேதாந்தாவின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை திரட்டி தன்னெழுச்சி போராட்டங்கள் நடத்தியது.

நியு இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஆங்கில நாளிதழ்கள் வேதாந்தாவிற்கும் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் உள்ள உறவுகளையும், மாவோயிஸ்ட் அழிப்பு என்ற பெயரில் மனித வேட்டை நடைபெற்றுவருவதையும் சுட்டிக் காண்பித்திருந்தன.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக மத்திய திட்டக் குழுவின் உறுப்பினர் திரு என்.சி.சாக்சேனா என்பவர் தலைமையில் 4 நபர்கள் கொண்ட குழு ஒன்றினை மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தினால் நியமிக்கப்பட்டு வேதாந்தாவின் சுரங்க திட்டங்களின் மீதான விசாரணை மேற்கொள்ள பணிக்கப்பட்டது.

17-08-2010 காலை ஆங்கில செய்தித்தாள்களில் “வேதாந்தா சுரங்க திட்டத்தில் பொpய அளவில் முறைகேடு” திரு சாக்சேனா தலைமையிலான குழு அறிக்கை மூலம் தெரிய வந்தது என செய்தி. ஆனால் இந்த செய்தி எந்த தமிழ் செய்தியிலும் வெளிவரவில்லை. மாறாக முப்பதாயிரம் கோடி ஊழல் என சந்தி சிரித்துக் கொண்டிருக்கும் காமன் வெல்த் விளையாட்டு ஊழலுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பது போல் ஒரு புறம் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி சிரித்துக் கொண்டு மறுபுறம் இந்த விளையாட்டிற்கான கொள்கை பாடலை இசைக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு என்ற அவர் பக்கத்தில் நின்று சிரித்துக் கொண்டு புகைப்படத்துடன் செய்தி, இங்கொன்றும் அங்கொன்றுமாக சில விபத்துச் செய்திகள், மனித உறவு முறைகேடுகளைச் சொல்லும் செய்திகள், வழக்கம் போல் உயர்நீதிமன்றம் 40 வருடமாக போராடிக் கொண்டிருந்த ஒரு பென்சன் வழக்கை முடிவுக்கு கொண்டு வந்த தீர்வு, இலவச தொலைக்காட்சி பெட்டிகள் தமிழக அரசு வழங்கியதில் தவறொன்றுமில்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு, தஞ்சை ராஜராஜன் விழா ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு மற்றும் இன்னபிற சினிமா செய்திகளோடு அப்பாவி தமிழர்களின் வாழ்வு துவங்கியது.

வேதாந்தா சுற்றுப்புற சூழல் விதிகள், காடுகள் சட்டம் ஆகியவற்றை முற்றிலுமாக தனது சுரங்க திட்டத்தில் பின்பற்றவில்லை என்றும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக இரண்டு வகை பழங்குடியினரின் வாழ்வினை பாழடித்தது இந்த தேசத்தின் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை உடைத்தெறிவதாக அமைகிறது என நிபுணர் சாக்சேனா அறிக்கை கூறுகிறது. இது குறித்து செய்தியாளர்கள் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சகத்தின் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷை கேட்ட போது 10 நிமிடங்களுக்கு முன்பாகத்தான் மேற்படி நிபுணர் குழு அறிக்கை எனக்கு வந்தது. இந்த நாட்டில் துரதிருஷ்டவசமாக ஒரு முறை உள்ளது. அதாவது ஏதேனும் ஒரு பெரிய தவறு கண்டுபிடிக்கப்பட்டால் அதிலிருந்து தப்புவதற்கு ஒரு ஜன்னல் “அபராதம் செலுத்து - செல்” என்கிற வகையில் திறந்திருக்கிறது என்றார். மேலும் தவறு நிரூபிக்கப்பட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார். இதோடு இந்த நாடகத்தின் காட்சிகள் முடிவுற்றுவிடும். மக்களும் நாளை காலை இதை மறந்திருப்பார்கள். இந்த நிபுணர் குழு விசாரணை, அவர்கள் சில தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பதெல்லாமே வேதாந்தா நிறுவனத்தின் மீது பெரிய அளவில் மக்கள் எழுச்சி வலுப்பெற்று விடக்கூடாது என்பதற்காக அரசே திட்டமிட்டு நடத்தும் நாடகமே.

இப்படி ஒரு புறம் செய்தியிருக்க அதே செய்தித்தாளில் கைரன் இந்திய என்கிற பெரிய பன்னாட்டு எண்ணை வள நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை 960 கோடி லாடருக்கு வாங்குவதாக வேதாந்தா நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என்றொரு செய்தி. அதைப்பற்றி எழுதிய டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் மறைமுகமாக இப்படி நாட்டின் எண்ணை வளத்தின் பெரும் பகுதியை ஒரு பன்னாட்டு நிறுவனம் வாங்க அனுமதிப்பது என்பது இந்த நாட்டின் பாதுகாப்பிற்கே குந்தகம் விளைவிப்பதாக அமைந்துவிடும் என்கிறது. ஏற்கனவே சைனாவினால் எல்லை பாதுகாப்பிற்கு அச்சம் விளைவிக்கும் நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கும் போது இது போன்று பன்னாட்டு நிறுவனத்திற்கு நாட்டின் எண்ணை வளத்தின் பெரும்பகுதியை பின்புறமாக நுழைந்து கைப்பற்ற அனுமதிப்பதென்பது நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிவிடும் என மத்திய அரசுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. ஆனால் இதைப்பற்றியோ அல்லது, சாக்சேனா குழு கூறியுள்ள குற்றச்சாட்டுக்களைப்பற்றியோ சிறிதளவும் கவலைப்படாமல் வேதாந்தா நிறுவனம் தனது பத்திரிகை செய்திக் குறிப்பில் நாங்களும் மற்றொரு பன்னாட்டு அமைப்பான சீசா கோவா என்ற நிறுவனமும் சேர்ந்து 665 கோடி டாலர் மதிப்பிற்கு கைரன் இந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டினை கைப்பற்றும் அளவிற்கு பங்குகளை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என தைரியமாக அறிக்கை விடுகிறது. இந்த வரத்தக பரிமாற்றமெல்லாம் இந்திய அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட வேண்டும். இருக்கவே இருக்கிறார்கள் உலக வங்கி நாயகர்கள் மன்மோகன் சிங், மான்டேக் சிங் அலுவாலியா, உள்துறை சிதம்பரம் போன்றவர்கள் என்கிற நம்பிக்கையில் இத்தகைய திமிரான அறிக்கையை வேதாந்தா வெளியிட்டிருக்கிறது.

சரி இந்த கைரன் இந்தியா என்ற நிறுவனம் யார் என பார்ப்போமானால்- அதுவும் இந்த நாட்டின் எண்ணை வளங்களை சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கிற பன்னாட்டு நிறுவனமே. இதன் தலைவர் சர் பில் கேம்மல் என்கிற அயல்நாட்டவர் என்பதோடு இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தில் (போர்டு டைரக்டர்கள்) உள்ள பெரும்பான்மையினரும் அந்நிய நாட்டவரே.


இந்த நிறுவனத்திற்கும் மத்திய அரசிற்குமுள்ள உள்ள மகிழ்ச்சியான உறவுகளை மேற்கண்ட புகைப்படங்கள் பறைசாற்றும். ஓஎன்ஜிசி என்று சொல்லப்படும் மத்திய பொதுத்துறை நிறுவனமான எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் இந்திய கடற்பகுதிகளில் 30 சதவீத எண்ணை பேசின்களையும் இந்த கைரன் இந்தியா என்கிற பன்னாட்டு நிறுவனம் 70 சதவீத எண்ணை பேசின்களையும் கைவசம் கொண்டிருக்கிறது என்றால் இதன் செல்வாக்கை புரிந்திருப்பீர்கள். ராஜஸ்தான் கடற்பகுதியில் இந்த கைரன் இந்தியா 150 எண்ணை கிணறுகளையும், 3111 சதுர கிலோமீட்டர் அளவிலான எண்ணை பேசினையும் தன்னகத்தே கொண்டது.

அதே போல் மன்னார் வளைகுடா கடலில் சுமார் 1450 சதுர கி.மீ, பரப்பளவிலான எண்ணை பேசினை தன்வசம் கொள்ள ராஜபக்ஷேயுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
காடுகளை அழித்து இந்தியாவின் பாக்சைட், இரும்பு தாது, அலுமினியம் போன்ற கனிம வளங்களை கொள்ளை கொண்டுபோகிறது வேதாந்தா நிறுவனம் என்கிற விமர்சனங்கள் பலமாக எழுந்து அதில் தற்போது தற்காலிகமாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளதால், நாட்டின் கனிமவள சுரண்டலை தற்காலிகமாக நிறுத்திவைத்து எண்ணை வளங்களை சுரண்ட முனைந்துள்ளது வேதாந்தா. இது குறித்து இரண்டு நிறுவனங்களும் அனுமதி கேட்டு வரட்டும் நாங்கள் கவனமாக இருப்போம் என இன்று இந்தியாவின் ஓட்டுப்பொறுக்கி அமைச்சர்களும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளும் தெரிவித்திருக்கும் அறிக்கைகளை நம்ப முடியாது. இப்படி ஒரு அறிக்கை என்றால் எங்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதற்காக வெளியிடப்பட்ட அறிக்கையாகவே கருத வேண்டும்.


இத்தகைய நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சம் விளைவிக்கிற, நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கிற வேதாந்தா, கைரன் இந்தியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து மக்கள் ஒன்றிணைந்து போராடி நாட்டை மீட்க வேண்டிய தருணமிது.

இன்று வினவு தளத்தில் எனது இந்த இடுகை வெளியிடப்பட்டுள்ளது - நன்றி வினவு தோழர்களுக்கு - சித்திரகுப்தன்-

4 comments:

 1. சிரமம் பார்க்காமல் சற்று நேரம் ஒதுக்கி நீங்கள் தீவிரமாக இந்த வலைபதிவுகளில் செயல்பட வேண்டும்.

  உங்களின் பத்திரிக்கை கட்டுரைகளை எத்தனை பேர்கள் அறிவார்கள்.

  அதனை விட வலைபதிவின் வீச்சு அதிகம்.

  ReplyDelete
 2. முதலில் செட்டிங்கில் நுழைந்து சொல் சரிபார்ப்பு என்ற பகுதியை நீக்கீ விடுங்கள். இது இருந்தால் எவரும் விமர்சனம் தரமாட்டார்கள்.

  ReplyDelete
 3. என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  14.1.2010

  ReplyDelete
 4. I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
  Nice One...
  Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

  ReplyDelete